பெண் ஒருவர் 3 முறை திருமணம் செய்துகொண்டு, 3 கணவர்கள் மீதும் வரதட்சணை புகார் சுமத்தி பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கான மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் தான், இப்படியொரு சம்பவம் அரங்கேறி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள மனகொடூர் பகுதியைச் சேர்ந்த ரவளி என்ற பெண், கடந்த 2015 ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு முதல் 3 மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அந்த பெண், திடீரென்று கணவர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி அடித்துத் துன்புறுத்துவதாகப் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் வெற்றிபெற்ற அவர், கணவர் சுரேஷிடமிருந்து 3 லட்சம் ரூபாய் இழப்பீடும் பெற்றார்.

இதனையடுத்து, சீனிவாஸ் என்பவரை அவர் 2 வதாக திருமணம் செய்துகொண்டார். அவருடன் முதல் 5 மாதங்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்த ரவளி, 5 மதார்களுக்குப் பிறகு, “கணவர் சீனிவாஸ், என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துகிறார். கடுமையாக துன்புறுத்துகிறார்” என்று குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிலும் 2 வது கணவரிடமிருந்து அவர் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, 3 வதாக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ரவளி, அவரும் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், அவர் புகார் பொய்யானது என்று போலீசார் கூறியதாகவும், இதனால் அவர் புகாரை போலீசார் வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த ரவளி, வீட்டின் அருகில் உள்ள மனக்கோடூரில் உள்ள ஒரு தண்ணீர் டேங்க் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும், அந்த கணவரிடமிருந்து எனக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த 3 வது கணவன், அங்குள்ள காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் அளித்தார். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், ரவளியை கீழே இறங்கி வரும் படி கூறி உள்ளனர். ஆனால், அவரோ, கணவரிடமிருந்து இழப்பீடு வேண்டும் என்று கூறி அடம் பிடித்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, அவரை எப்படியோ சமாதானம் செய்து, அவரை கீழே இறங்கச் செய்தனர். மேலும், ரவளியின் 3 வது கணவர் அளித்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ரவளியிடம் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, பெண் ஒருவர் 3 முறை திருமணம் செய்து கொண்டு, 3 கணவர்கள் மீதும் தொடர்ச்சியாக வரதட்சணை புகார் சுமத்தி பணம் கேட்டி வந்த நிலையில், தற்போது பணம் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், தெலுங்கானவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.