தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டும், அண்ணன் தம்பி போல் திகழ்பவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித். இருவருக்கும் ஆரம்ப காலத்திலிருந்தே நல்ல நட்பு உள்ளது திரைத்துறையினர் அறிந்ததே. இந்நிலையில் தல அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு சமீபத்தில் போன் கால் ஒன்றை செய்திருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. 

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவுக்கு அறிமுகமாகி நாற்பத்தைந்து வருடங்கள் ஆவதை ரசிகர்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். சமூக வலைதளங்களிலும் பெரியளவில் ட்ரெண்ட் செய்தார்கள். அதற்காக வாழ்த்து சொல்லவே தல அஜித் அவருக்கு போன் செய்து பேசியுள்ளார் என்று இணையத்தில் செய்திகள் வெளியானது. தற்போது இதுகுறித்து கலாட்டா குழு விசாரிக்கையில், அது போன்று ஏதும் இல்லை. அஜித் எந்த போன் காலும் செய்யவில்லை என்று அஜித் தரப்பினர் தெளிவு படுத்தினர். 

ரஜினியை மிகத் தீவிரமாக பின்பற்றுபவர் அஜித் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் ரஜினியின் பில்லா படத்தினை 2007இல் ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தியில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், போன் காலில் சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் உரையாடினார்கள் என்றும் கூறப்பட்டது.

2019ல் பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் தல அஜித் நடித்த விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்த் நடித்த பேட்ட ஆகிய படங்கள் மோதி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றாலும் வசூலில் விஸ்வாசம் படம் தான் அதிகம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களில் வசூலுக்கு சுமார் 25 சதவீதம் வரை வித்தியாசம் இருக்கும் என விஸ்வாசம் பட தயாரிப்பாளர் கூறியிருந்தார். பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் விஸ்வாசம் பட இயக்குனர் சிவாவுடன் கூட்டணி சேர்ந்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தல அஜித் கைவசம் வலிமை திரைப்படம் உள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது.

அதன் பின் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போட பட்டதால் வலிமை படத்தின் ஷுட்டிங் தடைபட்டு இருக்கிறது. இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் ஷுட்டிங் துவங்க முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது. தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.