கொரோனா பரவலில், முகக்கவசம் அணிவதும் - சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்பதே இன்றைய தேதிக்குத் தரப்படும் உச்சபட்ச தடுப்பு வழிமுறையாக இருக்கின்றது. இதில், பிறவற்றைக் காட்டிலும் மாஸ்க் அணிதல், மிகவும் முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. மாஸ்க்கில், பல வகைகள் இருப்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை மாஸ்க்கினை உபயோகப்படுத்தி வருகின்றனர். உதாரணத்துக்குத் துணி மாஸ்க், மெடிக்கல் மாஸ்க், என் 95 மாஸ்க் எனப் பல வகைகள் சந்தையில் இருக்கின்றன.

இதில், துளையிடப்பட்ட சுவாசக் கருவிகளுடன் இருக்கும் N95 முகமூடிகளை அணிவதை எதிர்த்து அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதமொன்றை தற்போது எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், இந்த மாஸ்க்கானது கொரோனா பரவுவதைத் தடுக்காது என்றும் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்த மாஸ்க் 'முரணானது' என்றும் கூறியுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ராஜீவ் கார்க், சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி முதன்மை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களுக்குப் பதிலாக, குறிப்பாகத் துளையிடப்பட்ட சுவாசக் கருவிகளைக் கொண்டவர்கள் N95 முகமூடிகளைத் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

``துளையிடப்பட்ட சுவாசக் கருவி பொருத்தப்பட்ட N95 மாஸ்க் கொரோனா வைரஸ் (coronavirus) பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு முரணானது, ஏனெனில் இது முகமூடியிலிருந்து வைரஸ் வெளியே வருவதைத் தடுக்காது. மேலும் மேலும் அது வைரஸைப் பரப்பவே செய்கிறது. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு, N95 முகமூடியின் முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அமைச்சர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் துணி மாஸ்க் உபயோகப்படுத்துவதும்கூட பாதுகாப்பானதுதான் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் உபயோகத்தில், நிறம் ஒரு பொருட்டல்ல என்றும், அன்றாடம் அதை உபயோகித்த நாளின் முடிவில் அந்தத் துணி மாஸ்க்கை ஐந்து நிமிடங்கள் கொதிக்கும் நீரில் நன்கு கழுவி, அதை உலர்த்த வேண்டும் என அறிவுரை சொல்லப்பட்டுள்ளது.

இருப்பினும், மாஸ்க் அணிவதன் மூலம், கொரோனா தொற்றிலிருந்து ஒருவர் முழுமையாகக் காக்கப்படலாம் என்பது இதுவரை எங்கும் எதிலும் நிரூபிக்கப்படாத கருத்து. உலக சுகாதார நிறுவனமேகூட, மாஸ்க் உபயோகம் கட்டாயம் என எங்கும் கூறவில்லை. மாஸ்க் அணியாவிட்டால் ஆபத்து என்பது, ஒரு பொது சுகாதார அச்சுறுத்தல்தான் என்பதால், மாஸ்க் வாங்கியே ஆகவேண்டுமென்று மக்கள் யோசிக்க வேண்டாம்.

மாஸ்க் உபயோகிக்க முடியாதவர்கள், ஒரு நாளைக்கு ஒரு கைக்குட்டை என உபயோகப்படுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள். அதேபோல தும்மல் இருமலின் தீவிரத்தைப் பொறுத்து, அதன் வீரியத்துக்கேற்ப அடிக்கடி கைக்குட்டையை மாற்றிக்கொள்வது நல்லது என்றும், தும்மல் - இருமல் தொந்தரவு இருப்பவர்கள், முடிந்தவரை உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்வது சிறப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காற்றின் மூலமாகக்கூட கொரோனா பரவும் என்று சொல்லப்பட்டது. காற்றில் கொரோன பரவும் என்ற தகவலும் சொல்லப்பட்டு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அறிவியலாளர்கள் பேசும்போது, ``ஒருவரின் உடலிலிருந்து இந்த கொரோனா, நீர்த்துளிகள் வழியாகத்தான் வெளிவருகிறது. வெளிவந்தபின், நீர்த்துளியிலிருந்து பிரிந்து காற்றில் கலக்கிறது. இந்தக் காற்றை ஒருவர் சுவாசிக்கும்போது, அவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது" என்று கூறியிருந்தனர்.

உலக சுகாதார நிறுவனம் இதற்கான ஆய்வில் விரைந்து செயல்பட வேண்டும் என்பது அறிவியலாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி, ஏறத்தாழ ஒன்றரை மாத காலத்துக்குப் பிறகே உலக சுகாதார நிறுவனம் இதைத் தொற்றுநோய் என அறிவித்தது. தாமதமான இந்த அறிக்கைதான், சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் நோய் தீவிரமாகப் பரவியதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல இப்போது, இது காற்றில் பரவும் தொற்றுநோய் என்பதையும் தாமதித்துச் சொன்னால் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவியது. இப்போது, கொரோனா காற்றில் பரவும் என்பது நிரூபணமாகியுள்ளது. 

ஆகவே மாஸ்க் விஷயத்தில், மக்கள் முன்பைவிட கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதிலும், என்.95 மாஸ்க் விவகாரத்தில், அனைத்தையும்விட அதிக கவனத்தோடு மக்கள் இருக்க வேண்டும். 
 

- ஜெ.நிவேதா