கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், முதல் நிலை பணியாளர்கள் எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சமீபத்தில் இந்திய அளவிலான இந்த எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்த ஒரு செய்தித்தாள், 15,000 க்கும் மேற்பட்ட முதல் நிலை பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் பிபிஇ தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடுகள் தான் இருக்குமெனக் கூறியிருந்தது அந்த செய்தித்தாள்.

ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கும் இந்த எண்ணிக்கையில், உயிரிழந்த மருத்துவர்கள் நூறு என்ற எண்ணிக்கையே ஒட்டியவர்கள் என இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடிப்படையாக வைத்து, ஒப்பீட்டளவில் மிகக் குறைவான நபர்களே இறந்திருக்கின்றனர் எனக் கூறப்பட்டது. 

இருப்பினும், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இறப்பு எண்ணிக்கையும் இறப்போர் விகிதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதனால், இதற்கு முன்பு இருந்த இறப்பு எண்ணிக்கையை வைத்து, இப்போது அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பை முடிவு செய்யக்கூடாது எனக் கூறுகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

இதுவொரு பக்கம்  இருக்க, இன்னொரு பக்கம் சில மருத்துவப் பணியாளர்களின் இறப்பு சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

அப்படி இன்றைய தினம் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை, முதலாம் ஆண்டு மாணவர் டாக்டர் கண்ணன்  இன்று அதிகாலை மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்திருப்பதாக ஒருதரப்பிலும், கொரோனா தொற்று அவருக்கு இருக்கலாம் என இன்னொரு தரப்பினரும் சொல்லி வருகிறார்கள். இதுபற்றி பேசிய மருத்துவச் செயற்பாட்டாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ``இந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும், மன வேதனையையும் ,கவலையையும் அளிக்கிறது" எனக்கூறியிருந்தார். 

மரணத்தின் பின்னுள்ள மர்மம் குறித்து விரிவாக பேசிய அவர், ``மருத்துவர் கண்ணனின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்னவென்று தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த நோய்ப் பேரிடர் காலத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு அதிக அளவில் உள்ளாகிறார்கள். அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதைப் போக்கிட அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு சார்பில் முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், தொடர்ந்து 24 மணி முதல் 36 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பணி செய்யக் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதனால் உள மற்றும் உடல் உளைச்சல்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உள்ளாகிறார்கள். இவர்கள் அனைவரும், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்ய உட்படுத்தப்பட வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களைக் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்குவதை, அங்கிருக்கும் மருத்துவர்கள் கைவிட வேண்டும்.

மேலும் ஏற்கெனவே இதுவரை நடந்த மன ரீதியாகத் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, உரிய மன நல ஆலோசனைகளும் சிகிச்சைகளும் அரசு வழங்க வேண்டும். 

மருத்துவ மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதைச் சரிசெய்யக் கல்லூரி அளவிலும், மாநில அளவிலும் பெற்றோர்கள், அரசு சாரா அமைப்புகள் அடங்கிய 'குறை தீர்க்கும் குழு' அமைக்கப்பட வேண்டும்" எனக்கூறியிருக்கிறார்.

இந்த சிறப்புக் குழு குறித்து மருத்துவர் ரவீந்திரநாத்  ஏற்கனவே தொடர்ந்திருந்த பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போது இறந்திருக்கும் மருத்துவர் கண்ணன் குடும்பத்தினருக்கு, ரூ 50 லட்சம் வரை  நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் மருத்துவர் ரவீந்திரநாத் கோரிக்கை வைத்துள்ளார்.

 

- ஜெ.நிவேதா.