ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் வெளியான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இராமாயணம் இதிகாசத்தின் ஒரு பகுதியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் இராமனாக பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிக்க அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் கீர்த்தி சனொன் நடித்துள்ளார். மேலும் படத்தில் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். . T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தினை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர் மேலும் ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

படத்தின் அறிவிப்பிலிருந்தே ஆதிபுருஷ் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்படி ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி உலகமெங்கும் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் ஆரவாரமாக வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் உலகளவில் கோடிகளை குவித்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது. தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் இந்த படம் ஒன்றாமல் இருந்தது. இதனால் ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு கலைவையான விமர்சனத்துடன் வலுவான எதிர்ப்பும், அதனுடன் மோசமான கருத்துகளும் நாட்டு மக்களிடையே எழுந்தது. இந்து மத கடவுள்களை தவறாக சித்தரிப்பதும். மதத்தினரை கொக்சைப் படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளதாகவும் கருத்துகள் எழுந்தது. மேலும் படத்தை தடை செய்ய இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் பிரதம் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தனர். பல இடங்களில் இந்த படத்திற்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டது. விசாரணையில் ஆதிபுருஷ் படக்குழுவினரை கடுமையாக எச்சரித்தது நீதிமன்றம்.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்திற்கு வசனம் எழுதிய வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் அவர்களுக்கு தொடர்ந்து மிரட்டல்களும் எழுந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கோரி அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளார். அவர் பதிவில்,

“ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கைகூப்பி நான் என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். பிரவு பஜ்ரங்பலி நம்மை ஒன்றிணைத்து, நம்முடைய புனித சனாதனதுக்கும், நமது உயர்ந்த தேசத்திற்கும் நாம் நம் சேவையை புரிவதற்கான வலிமையை வழங்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து ஆதிபுருஷ் படத்திற்கு எதிர்ப்புகள் திரையுலகிலும் ரசிகர்களிடமும் எழுந்து வருவதால் ஏற்கனவே படத்தில் பணியாற்றிய சிலர் தங்கள் வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் வரிசையில் தற்போது ஆதிபுருஷ் பட வசனகர்த்தாவின் பதிவும் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.