அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக கொடுப்பவர் நடிகர் விஷால். அதன்படி அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் கமர்ஷியல் வெற்றி திரைப்படமாக அமைந்து வருகின்றது.தற்போது விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்திற்காக மூலம் இயக்குனராக பிஸியாக இயங்கி வருகிறார்.

இதனிடையே விஷால் நடிப்பில் உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. நடிகர் விஷால் நடித்து தயாரிக்கும் இப்படத்தினை திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகீரா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு இணையான முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். இருவருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், ரித்து வர்மா, நிழல்கள் ரவி, ஒய் ஜீ மகேந்திரன், ரெடின் கிங்க்ஸ் லி, அபிநயா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் டைம் டிராவல் படமாக வித்யாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலானது. அதிரடி ஆக்ஷன் காட்சியுடன் மிரட்டலான வித்யாசமான கெட்டப்பில் விஷாலும் எஸ் ஜே சூர்யாவும் வரும் காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளினால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் படத்தின் டப்பிங்கின் போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடிகர் விஷால் டப்பிங் செய்யும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் இடம் பெற்றுள்ள மார்க் ஆண்டனி வசனத்தை விஷால் பேசும் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இறுதிகட்ட வேலைகள் படத்தில் இன்னும் இருப்பதால் விரைவில் படம் வெளியாகும் தேதி மற்றும் மேலும் சில அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.