தமிழ் சினிமாவில் சமூக கருத்துகளை கவனமாக திரைப்படமாக கையாண்டு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் படி படங்களை கொடுத்து அந்த திரைப்படத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு இயக்குனர் வெற்றி மாறன். முதல் படத்தில் காமர்ஷியாலாக களம் இறங்கினாலும் தொடர்ந்து மண் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் நிலவும் பிரச்சனைகளை நேர்த்தியான படமாக்கமாக கொடுத்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற செய்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அதன்படி, ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் ஆகிய படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடுதலை’ கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. மேலும் பல திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று விடுத்தலை முதல் பாகம் படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

படம் பார்த்து ரசித்து வியந்த ரசிகர்கள் திரைபிரபலங்கள் வெற்றி மாறன் மற்றும் படத்தில் கதையின் நாயகனாக நடித்த சூரி அவர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமா வளவன் வெற்றி மாறனை புகழ்ந்து பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து அவரது பதிவு ரசிகர்களினால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அவர் பதிவில், ‘

தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது. தோழர் வெற்றி..

மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க விடுதலை என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக சார்ந்த பிரச்சனைகளுக்கு திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இயக்குனர் வெற்றிமாறன் பல இடங்களில் குரல் கொடுத்துள்ளார். மேலும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுடன் நிறைய சமூக கருத்தாக்கம் மேடையை வ=இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.