இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழ்பவர் நடிகர் ஷாரூக் கான். முன்னதாக ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் டைகர் 3 படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் ஷாரூக் கான் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தளபதி விஜய் உடன் இணைந்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் கொடுத்து தென்னிந்திய ரசிகர்களை மகிழ்வித்த அட்லீ அடுத்ததாக தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் உடன் இணைந்துள்ள ஜவான் திரைப்படம் ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடும் வகையில் தயாராகி வருகிறது. ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.

ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் அட்லி மற்றும் நயன்தாராவிற்கு மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத்துக்கும் ஜவான் திரைப்படம் தான் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக ஜவான் திரைப்படத்தை வரும் ஜூன் 2-ம் தேதி வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஷாரூக் கானிடம், “நீங்கள் இயக்குனர் அட்லீயின் முந்தைய படங்களை பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் அதில் உங்களுடைய ஃபேவரட் படம் எது?” என ரசிகர் கேட்ட கேள்விக்கு, “எனக்கு தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். மேலும் ஜவான் படமும்…” என ஷாரூக் கான் பதிலளித்துள்ளார். ஷாரூக் கானின் இந்த பதிலால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஷாரூக் கானின் அந்த ட்விட் இதோ…