கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த திரைப்படங்களில் ஒன்றாக வெளியான திரைப்படம் 'டைரி'. இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் அட்டகாசமான ஹாரர் திரில்லர் கதைகளத்தில் வெளியான டைரி திரைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றது. முதல் படத்திலே சிக்கலான திரில்லர் கதையை கொண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்ற இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அடுத்த திரைப்படம் நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நடிப்பில் உருவாகவுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா, டைரி, ருத்ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் எஸ் கதிரேசன் அவர்களின் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 12 வது தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு ‘புல்லட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் குறித்து தற்போது முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து எல்வின் நடிக்கும் முதல் படத்திற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவினையும் வாழ்த்துகளையும் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றது. முன்னதாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தை தயாரித்து இயக்கினார் தயாரிப்பாளர் கதிரேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்வின் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் ‘புல்லட்’ படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அட்டகாசமான ஆக்ஷன் திரில்லர் கதைகளத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் எல்வின் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ் நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருகின்றனர். மேலும் படத்தின் சுவாரஸ்யம் கூட்டுமளவிற்கு ஹீரோ எல்வினின் அண்ணனும் பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். புல்லட் படத்திற்கு 'டிமான்டி காலனி', 'டைரி' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அதை தொடர்ந்து சாம் சி எஸ் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இது குறித்து ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புல்லட் பட டைட்டிலை வெளியிட்டு அதனுடன், “என் சகோதரன் எல்வின் நடிக்கும் புல்லட் பட டைட்டிலை வெளியிடும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை., இப்படத்தில் நான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் ஹீரோவாக நடிக்கவிருப்பதை பார்க்கும்போது எனக்கு பெருமையாகவும் உற்சாகமாகவும் உள்ளது. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த அன்பும் ஆதரவையும் எனது சகோதரனுக்கும் தா வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..” என்று குறிப்பிட்டு பதிவுட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது, சென்னையை தொடர்ந்து ஹைதராபாத், தென்காசி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#BULLET 🔥
I assure you for a great theatrical experience with the solid content 👍 pic.twitter.com/lRKBOlaPjY

— Innasi Pandiyan (@innasi_dir) July 16, 2023