இயக்குனர் சுபித்தோ சென் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி இருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அதா சர்மா சோனியா பலானி, யோகிதா பிலானி, ஆகியோருடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என குறிப்பிடப்பட்டு சமீபத்தில் வெளிவந்த தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து மற்றும் பிற மதத்தைச் சார்ந்த பெண்களை சூழ்ச்சியால் இஸ்லாம் மதத்திற்கு மாற்றி பின்னர் அவர்கள் ISIS தீவிரவாத அமைப்பில் சேர்வது போன்ற கதைக்களத்தை இந்த ட்ரெய்லர் வெளிப்படுத்துகிறது. இதனால் இந்த திரைப்படத்திற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

குறிப்பாக கேரளாவில் கேரள முதல்வர் பினராய் விஜயன் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ட்ரெய்லர் அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புவதை நோக்கமாக கொண்ட பல பொய்களை பரப்புவது போல் தெரிவதாக மிகக் கடுமையாக சாடினார். கேரளாவில் ஷாலினி உன்னிகிருஷ்ணன் என இந்து குடும்பத்தில் பிறந்த செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அதா சர்மா பின்னர் சூழ்ச்சியால் இஸ்லாமியர்களாலேயே இஸ்லாம் மதத்திற்கு பாத்திமா என மதம் மாற்றப்படுகிறார். அதன் பிறகு ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்படுவது போல் காட்டப்படும் அவரிடம் எப்போது ISISல் சேர்ந்தீர்கள் விசாரணை நடைபெறுவது போல காட்சிகள் நகருகின்றன. மேலும் படத்தில் பேசப்படும் பல கருத்துக்களும் துளியும் ஆதாரமற்ற கருத்துகளாக இருப்பதால் தொடர்ச்சியாக படத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், அடுத்த 20 ஆண்டுகளில் கேரளா முழுவதுமாக ஒரு இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடும் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். என்ற வசனமும், "இன்னும் கேரளாவில் இருந்து என்னைப்போல் ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வாறு மாற்றப்பட்டு இருக்கிறார்கள்" என்ற வசனமும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதால் கேரள அரசு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை எதிர்த்துள்ளது. இந்நிலையில் நாளை மே 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதால் இத்திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க கோரி பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரள மண்ணின் உண்மையான சூழலுக்கு எதிராகவும் மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் இருப்பதால் மிகப்பெரிய பதட்டம் உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களின் வாழ்வியலில் அவதூறு சுமத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளும் வசனங்களும் கண்டிக்கத்தக்கது. எனவே அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்திலும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கும் இந்த தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என இந்த கடிதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து கேரளாவின் முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழ் நாடு அரசின் பதில் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.