"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" | "சுட்டா தல எனக்கு"- நடிகராக மனதை விட்டு நீங்காத மனோபாலாவை நினைவு கூறும் ரசிகர்கள்!

நடிகராக மக்கள் மனதை விட்டு நீங்காத மனோபாலா,actor manobala passed away fans remembering his movies | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்த மனோபாலா அவர்கள் இன்று மே 3-ம் தேதி திடீரென காலமானார். கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோபாலா அவர்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தனது வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மனோபாலா தற்போது உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69. இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பின்னர் இயக்குனர் நடிகர் என வலம் வந்த மனோபாலா அவர்கள் இதுவரை 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி நகைச்சுவை வேடங்களாக இருந்தாலும் சரி மிகச் சிறிய கதாபாத்திரங்களில் கூட சில நிமிடங்களில் மக்களின் இதயங்களில் இடம் பிடிக்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த மனோபாலாவின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு தான். திடீரென இன்று மே 3ம் தேதி மனோ பாலா அவர்கள் உயிரிழந்த செய்தி கேட்ட ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மனோபாலா அவர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களையும் கதாப்பாத்திரங்களையும் அதன் பிரபலமான வசனங்களையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

தனக்கே உரித்தான உடல் மொழியில் ஒவ்வொரு திரைப்படங்களிலும் முத்திரை பதித்த மனோபாலா பல படங்களில் நடித்த காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக மக்கள் மனதை கவர்ந்தவர். இயக்குனர் பாரதிராஜா அவர்களின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்த நடிகர் மனோபாலா தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக், கோபுரங்கள் சாய்வதில்லை, நேசம், ரட்சகன் என பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கண்ணா திரைப்படத்தில் மன்சூர் அலிகான் உடன் இவர் இணைந்து நடித்த காட்சிகளில் பல இடங்களில் வசனமே இல்லாமல் கண்ணை உருட்டியே ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். சேது படத்தில் தமிழ் வாத்தியாராகவும் பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவின் மாமா கதாபாத்திரத்திலும் கவனம் ஈர்த்த மனோபாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தில் மந்திரவாதியாக வந்த ஒற்றை காட்சியில் ஒட்டுமொத்த திரையரங்கையும் கலகலக்க வைத்தார். இவரது உருவத்திற்கும் போலீஸ் உடைக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட திருப்பதி, தலைநகரம், கிரீடம், பசுபதி C/o ராஜக்காபாளையம், குசேலன், தனம், TN 07 AL 4777, குரு என் ஆளு, வணக்கம் சென்னை, ஆம்பள, ஓ மை டாக் உள்ளிட்ட பல படங்களில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நகைச்சுவையை தெளித்த மனோபாலா திரையில் தோன்றினாலே சிரிப்பு வந்துவிடும். குறிப்பாக ஜீவா நடிப்பில் வெளிவந்த தித்திக்குதே திரைப்படத்தில் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் உடன் இணைந்து நடித்த மனோபாலாவின் நகைச்சுவை காட்சி இன்று வரை பேசப்படுகிறது. ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் விவேக்கிற்கு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த இயக்குனராக வரும் மனோபாலா, "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்ற வசனத்தை சொல்லிக் கொடுக்கும் அந்தக் காட்சி மறக்க முடியாதது.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் திரைப்படத்தில் “சுட்டா தல எனக்கு”, தலைநகரம் படத்தில் வடிவேலுவை பார்த்து, “கருப்பா பயங்கரமா இருப்பான்,” இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் “எல்லாம் சரியாகத்தான் மன்னா உள்ளது ஆனால் ஒட்டுவதற்கு தான் நேரம் கூலி வரவில்லை” என தனது வசனங்களால் அந்த நகைச்சுவை காட்சியை மற்றும் தளத்திற்கு எடுத்துச் சென்றவர் மனோ பாலா. அந்நியன் - அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களில் TTR கதாபாத்திரத்தில் கலக்கிய மனோபாலா தமிழ் படம் படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் செய்யும் கலாட்டா வேற லெவல். சிறுத்தை படத்தில் வில்லனோடு இணைந்து “ஐயோ பாவா” என மனோ பாலா ஒவ்வொரு காட்சியிலும் பேசும் வசனங்கள் திரையரங்குகளை சிரிப்பால் அதிர வைத்தன. சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நியூமராலஜியில் பெயர் மாற்றி வைக்கும் காட்சியில் கலகலப்பூட்டிய மனோபாலா, சுந்தர்.சி அவர்களின் கலகலப்பு, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு, கலகலப்பு 2, அரண்மனை 2, அரண்மனை 3 என ஒவ்வொரு படங்களிலும் தனது நகைச்சுவையால் தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயனின் டான், வைகை புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் அசத்திய மனோபாலா அடுத்ததாக தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வரும் லியோ திரைப்படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் தி லயன் கிங் திரைப்படத்தில் ராஜூ கதாபாத்திரத்திற்கு இவர் கொடுத்த பின்னணி குரல் மிகவும் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மனோபாலா இறந்த செய்தி தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மனோபாலா அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

'சீயான் விக்ரமுக்கு எலும்பு முறிவு!'- பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்கான ஒத்திகையின் போது விபத்து! விவரம் உள்ளே
சினிமா

'சீயான் விக்ரமுக்கு எலும்பு முறிவு!'- பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்கான ஒத்திகையின் போது விபத்து! விவரம் உள்ளே

MS தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்... LET'S GET MARRIED படப்பிடிப்பில் கொண்டாட்டம்! காரணம் இதோ
சினிமா

MS தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்... LET'S GET MARRIED படப்பிடிப்பில் கொண்டாட்டம்! காரணம் இதோ

வெங்கட் பிரபுவின் பொறுமையை சோதித்த நாக சைதன்யா... கஸ்டடி படத்தின் கலகலப்பான ப்ரொமோஷன் வீடியோ இதோ!
சினிமா

வெங்கட் பிரபுவின் பொறுமையை சோதித்த நாக சைதன்யா... கஸ்டடி படத்தின் கலகலப்பான ப்ரொமோஷன் வீடியோ இதோ!