சுயாதீன இசை கலைஞராக தனது பயணத்தை தொடங்கி பின்னர் அட்டகாசமான RAP பாடகராக தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலமடைந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என அசத்தி வருகிறார். முன்னதாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்த ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய ஹிப் ஹாப் ஆதி தொடர்ச்சியாக இன்று நேற்று நாளை தனி ஒருவன் அரண்மனை 2 கவண் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து நட்பே துணை மற்றும் சிவகுமாரின் சபதம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி நடித்தார். இந்த வரிசையில் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் கடைசியாக அவர் இரட்டை வேடங்களில் நடித்த அன்பறிவு திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த (2022) ஆண்டு ரிலீஸ் ஆனது.

அடுத்ததாக சிலம்பரசன்.TR - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் PT Sir திரைப்படத்தில் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கும் PT Sir திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் அடுத்த புதிய திரைப்படமாக வெளிவர தயாராகி இருக்கிறது வீரன். மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK.சரவன் இயக்கத்தில் SUPER HERO படமாக உருவாகி இருக்கும் வீரன் திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வீரன் திரைப்படத்திற்கு தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கும் வீரன் திரைப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் வீரன் திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த அட்டகாசமான படைப்பாக உருவாகி இருக்கும் வீரன் திரைப்படம் வருகிற ஜூன் 2ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மாஸான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை அதரவிடும் ஹிப் ஹாப் ஆதியின் வீரன் பட அந்த புதிய போஸ்டர் இதோ…