தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் அஜித்குமார் இந்த 2023 ஆம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறார். அந்தவகையில் மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் உடன் இணைந்த அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் தயாராகும் AK62 படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை P.சுப்பிரமணியம் அவர்கள் இன்று மார்ச் 24ஆம் தேதி அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அஜித் குமார் அவர்களின் தந்தை மறைவுக்கு கோடான கோடி ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் . கலாட்டா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து நடிகர் அஜித்குமார் அவர்களின் தரப்பில் இருந்து எங்களது தந்தையார் திரு பி.எஸ்.மணி 85 அவர்கள் பல நாட்களாக உடல் நலம் இன்றி படுகையில் இருந்து வந்தார் இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். என குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், “இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார். மேலும் அஜித் குமார் அவர்களின் வீட்டிற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து அஜித் குமார் அவர்களின் தந்தையாரின் திருவுடலுக்குக்கு மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது இரங்கல் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். “நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத்தந்தையார் திரு.பி.எஸ்.மணி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். அஜீத் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய தந்தையாரின் திருவுடலுக்கு மரியாதை செலுத்தினோம்..குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.” என தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அந்த இரங்கல் பதிவுகள் இதோ…