ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜயின் லியோ படத்திற்கான சிறப்பு காட்சிகள் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தளபதி விஜய் உட்பட நட்சத்திர நாயகர்களின் திரைப்படங்கள் வெளிவரும் சமயங்களில் திரையரங்குகள் அனைத்திலும் ரசிகர்கள் திருவிழா கொண்டாடுவார்கள். அதிகாலை முதல் நாள் முதல் காட்சி காண்பதற்காக விடிய விடிய பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை அடித்து கொண்டாடி தீர்ப்பார்கள் ரசிகர்கள். இது மாதிரி நட்சத்திர நாயகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் கொண்டாடப்படுவது ஆண்டுக்கு ஒரு ஐந்து படங்களாக அல்லது அதிகபட்சமாக ஒரு ஏழு படங்களாக தான் இருக்கும். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப் போலவே நட்சத்திர நாயகர்களின் திரைப்படங்களையும் ரசிகர்கள் பண்டிகைகளாக கொண்டாடி வரும் சூழலில் தற்போது அந்த கொண்டாட்டத்தில் மிக முக்கிய பகுதியான அதிகாலை காட்சி சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் வெளிவந்த வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சிகளின் சமயத்தில் எதிர்பாராமல் நேர்ந்த ஒரு ரசிகரின் உயிரிழப்பு இந்த அதிகாலை கொண்டாட்டங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயிலர் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதிக்கப்படவில்லை. காலை 9 மணியிலிருந்து தான் முதல் காட்சி ஆரம்பமானது. இருப்பினும் தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த நிலையில் தான் தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த லியோ திரைப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கும் நிலையில் தற்போது ரிலீசுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவில் லியோ திரைப்படத்தின் மீது ஒரு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்னதாக லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி காலை 9AM மணி முதல் முதல் காட்சி தொடங்கப்பட்டு கடைசி காட்சி அன்று இரவு 1.30AM மணி வரை திரையிடப்பட வேண்டும் என்றும் ஒரு நாளுக்கு 5 காட்சிகள் என்றும் உத்தரவு வெளியானது. இருப்பினும் லியோ திரைப்படத்திற்கான அதிகாலை காட்சிகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் படக்குழுவினர் இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த விசாரணை இன்று அக்டோபர் 17ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், லியோ திரைப்படத்திற்கான 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட முடியாது என்றும், 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணி முதல் காட்சியை தொடங்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்க வேண்டும் என்றும் அதனை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தற்போது தனது உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி உடனடியாக படக்குழுவினர் தமிழ்நாடு அரசிடம் காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கோர இருக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசின் பதில் என்னவாக இருக்கும்? எப்போது கிடைக்கும்? என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.