தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டுகளாக வலம் வரும் நடிகர்கள் அஜித் – விஜய். இவர்களின் ரசிகர்கள் அறிமுகமான காலத்திலிருந்தே இரு துருவங்களாக மோதிக் கொண்டு இருக்கின்றனர். இருந்தாலும் இருவரும் நட்பு ரீதியாக ஒருவருக்கொருவர் எந்த மேடையிலும் விட்டு கொடுத்ததில்லை. முந்தைய தலைமுறையினருக்கு எப்படி ரஜினி – கமல் இருந்தார்களோ அதே மாதிரி இன்றைய தலைமுறையினருக்கு அஜித் விஜய் இருந்து வருகின்றனர். ஆனால் நிறைய முறை இருவரின் படங்களும் மோதி பாக்ஸ் ஆபிஸை திணறடிக்க வைத்தது. எந்தவகையிலும் ஒருவருக்கொருவர் படங்கள் எதற்கும் தாழ்ந்ததில்லை என்ற வகையில் இருவரது படங்களும் இதுவரை வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படமும் அஜித் குமார் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படமும் நேரடியாக பொங்கல் வெளியீடாக மோதியது. இரு படங்களும் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடிகளை குவித்து தமிழ் சினிமாவின் இந்த ஆண்டின் ஆகச்சிறந்த ஓபனிங் காக இருவரது படமும் அமைந்தது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீர் பிரிவு படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சென்னை வந்தடைந்துள்ளனர். மற்றும் அஜித் தனது 62வது படமான ‘AK62’ திரைப்படத்தின் வேலையில் இறங்கியுள்ளார். இப்படத்தை மகிழ் திருமேணி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா விடம் இருந்து இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு வெற்றியுடன் தொடங்கிய அஜித் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தும்படி அவரது தந்தையின் மறைவு நிகழ்ந்துள்ளது. அஜித் குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் வயது மூப்பின் காரணமாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென சுப்பிரமணி உறங்கும்போதே இன்று அதிகாலை 4.30 மணியளவில் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த சுப்பிரமணி அவரது உடல் பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து நடிகர் அஜித் மீது அன்பு கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அஜித் அவரது தந்தை மறைவையொட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிரெதிர் துருவங்களாக திரைப்பயணம் இருந்தாலும் அடிப்படையில் நல்ல நண்பர்கள் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இது தொடர்பான கருத்துகளை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.