இந்திய அழகி மானசா வாரணாசி உள்பட பலபேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், உலக அழகி இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமிக்ரானின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் தற்போது 2021 ஆம் ஆண்டின் உலக அழகிப் போட்டியின் இறுதிப் போட்டியும் பாதிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் தீவுப் பகுதியான போர்டோ ரிகோவில் () நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நாட்டு அழகிகள் அங்கு குவிந்தனர். இதில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்றுள்ளார்.

உலக அழகி பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் உலக அழகிப்போட்டி தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் திடீரென்று அறிவித்தனர்.

போட்டியில் பங்கேற்றுள்ள அழகிகளில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இதில் இந்திய அழகி மானசா வாரணாசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து உலுக அழகி போட்டி அமைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் பங்கேற்பாளர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்போட்டியை மேற்பார்வையிட பணி அமர்த்தப்பட்ட வைரலாஜிஸ்டுகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், போர்டோ ரிகோ சுகாதாரத்துறையுடன் கலந்துரையாடினர்.

அதன் பின்னர் உலகளாவிய இறுதிப் போட்டியை ஒத்திவைக்க போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இறுதிப் போட்டி அடுத்த 90 நாட்களில் போர்டோ ரிகோவில் நடைபெறும். போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மிஸ் வேர்ல்டு லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலியா மோர்லி கூறும்போது, ‘‘எங்கள் போட்டியாளர்கள் திரும்பி வருவதை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’’ என்றார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ள இந்திய அழகி மானசா வாரணாசி உள்பட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து மிஸ் இந்தியா அமைப்பு டட்விட்டரில் கூறும்போது, ‘‘கொரோனா பாதிப்பு காரணமாக உலக அழகி இறுதிப்போட்டியை ஒத்தி வைக்க உலக அழகி அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்திய அழகி மானசா வாரணாசியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் போர்டோ ரிகோ நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரது பாதுகாப்புக்குதான் நாங்கள் முன்னுரிமை அளிப்போம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்திய அழகி மானசா வாரணாசி ஐதராபாத்தை சேர்ந்தவர். அவர் 2021 ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தை வென்று உலக அழகி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். சமீபத்தில் இஸ்ரேலில் நடந்த உலக பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.