தென்கொரியாவில் பெண்களை பசுக்களைப் போல் சித்தரித்து வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை தயாரித்த பிரபல பால் உற்பத்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

தென்கொரியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக சியோல் மில்க் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சியோல் மில்க் நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில் பெண்களை பசுமாடுகள் போல் சித்தரித்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட விளம்பர வீடியோவில் ஒரு நபர் காட்டுப்பகுதியில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்கிறார். 

அங்கு புல்வெளி நிறைந்தப் பகுதியில் சில பெண்கள் வெள்ளை நிற உடையணிந்து ஓடையில் ஓடும் நீரை குடிப்பது போன்றும், யோகா செய்வது போன்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அதை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்கிறார். அப்போது “இயற்கையை அதன் தூய்மையில் பாதுகாக்கும் ஒரு அழகிய இடத்தில் அவற்றை கேமராவில் படம்பிடிப்பதில் இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். இயற்கையில் இருந்து தூய்மையான நீரை அவர்கள் குடிக்கின்றனர். 

seoul milk cow women

இயற்கையான உணவுகளையே உட்கொள்கின்றனர். அமைதியான சூழ்நிலையில் அமைதியாக வாழ்கின்றனர். நான் அவர்கள் அருகில் கவனமுடன் செல்ல முயற்சிக்கிறேன்’ என்கிறார். 

அப்போது அவர் கிழே கிடக்கும் மரத்துண்டில் தனது காலை வைத்ததால் அது உடைகிறது. அந்த சத்தத்தை கேட்ட அப்பெண்கள் திடீரென பசு மாடுகளாக மாறுகின்றனர். இதனைத்தொடர்ந்து ‘தூய்மையான நீர், ஆரோக்கியமான உணவு, 100 சதவிகிதம் சியோல் பால். இயற்கையான சூழ்நிலையில் இருந்து இயற்கையான பால்’ என அந்த விளம்பரம் முடிவடைகிறது.

பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து காட்சிப்பொருளாக்கி பால் விளம்பரம் செய்ததாக சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மீது உலக அளவில் கண்டனம் எழுந்தது. சியோல் பால் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்  என தென் கொரியாவில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. இதனால் சியோல் பால் உற்பத்தி நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை பெருமளவு சரிந்தது.

உலகலாவிய சர்ச்சையை தொடர்ந்து பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து விளம்பரம் எடுத்ததற்க்கு சியோல் பால் உற்பத்தி நிறுவனம் மன்னிப்புக்கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

பாலின வேறுபாடு மற்றும் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகள் குறித்து, இந்த விளம்பரம் தேசிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெண்களை பசுக்களாக சித்தரிப்பதுடன் இந்த விமர்சனம் நிற்கவில்லை.

பெண்கள் குழுவை ரகசியமாக படம் பிடித்திருப்பதை பற்றியும் சிலர் குரல் கொடுக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, தென்கொரியாவில் உளவு கேமரா மூலம் குற்றங்கள் நடந்துள்ள நிலையில், இது விமர்சிக்கப்பட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.

"ரகசிய கேமரா" என்றழைக்கப்படும் "மொல்கா" தென் கொரிய பெண்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக உள்ளது. தவறான காரணங்களுக்காக செய்திகளில் சியோல் மில்க் இடம்பெறுவது இதுவே முதல்முறையல்ல.

2003 ஆம் ஆண்டு இந்நிறுவனம் நடத்திய மேடை நிகழ்ச்சியில் மாடல் பெண்கள் நிர்வாணமாகத் தோன்றி, ஒருவர் மீது ஒருவர் தயிரைத் தெளித்தனர்.

seoul milk

பின்னர் அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் தலைவருக்கும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடல்களுக்கும் ஆபாசமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுமக்களிடையே வலுத்த எதிர்ப்பு காரணமாக  பெண்களை பசுக்கள் போல் சித்தரித்து பால் விளம்பரம் செய்த காணொளியை யூ-டியூப்பிலிருந்து சியோல் மில்க் நிறுவனம் நீக்கியுள்ளது. ஆனால் பலர் அந்த காணொளியை இணையத்தில் பதிவேற்றம் செய்ய அது வைரலாகியுள்ளது.

சிலர் அந்த காணொளியில் இருந்த ஆணின் நடத்தையை, "மொல்கா"வுடன் ஒப்பிட்டுள்ளனர். தென்கொரியாவில் மொல்கா என்றால் சட்டத்துக்கு புறம்பாக மனிதர்களை ரகசியமாக படம் பிடிக்கும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.