“கொரோனாவிலிருந்து குணமடைந்த 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தொற்றியதாகக் கூறப்படும் கொரோனா என்னும் பெருந்தொற்று நோயால், உலக சிக்கித் தவித்து வருகிறது.

இதுவரை, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் கொரோனா என்னும் கொடிய நோய் பரவி லட்சக்கணப்பான உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசின் பாதிப்பும் கிட்டத்தட்ட 2 கோடியை நெருங்கி வருகிறது.

முக்கியமாக ஒட்டு மொத்த உலக நாடுகளும் கொரோனா தாக்கம் காரணமாக மிகப் பெரிய பொருளாதார இழப்புகளையும் சந்தித்துள்ளன. பல நாடுகளில் வேலையில்லா திண்டாட்டங்களும் மிகப் பெரிய அளவில் தலைவிரித்தாடுகின்றன.

எனினும், உலகம் முழுவதும் கொரோனா என்னும் பெருந் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 1.21 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தற்போது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டு, முற்றிலும் குணமடைந்துள்ள 100 பேரை சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையானது, கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ந்து முதல் கண்காணித்து வந்தது. மேலும், அவர்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அப்படிப் பரிசோதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 59 என்றும் கூறப்படுகிறது. இந்த பரிசோதனையானது, ஜூலை மாதத்தின் கடைசி தேதி வரை கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவில், “100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம் பாதிக்கப்பட்டு இருப்பது” தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, “பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரலானது, காற்றோட்டம் மற்றும் வாயு பரிமாற்ற செயல்பாடுகள் ஆரோக்கியமாக உள்ள மற்றவர்களின் நிலைக்கு மீளவில்லை” என்று, ஆய்வை மேற்கொண்ட டாக்டர் பெங் ஜியோங் தலைமையிலான குழுவினர் கூறியுள்ளனர்.

அத்துடன், “கொரோனா வைரசில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும், ஆக்சிஜன் எந்திரங்களை நம்ப வேண்டியுள்ளதாகவும்” பீஜிங் பல்கலைக்கழகத்தின் டோங்ஸிமென் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் லியாங் டெங்ஸியாவ் தெரிவித்துள்ளார்.

மேலும், “கொரோனா வைரசிடமிருந்து குணமடைந்தவர்களில் 65 வயதுக்கு உட்பட்டோரில் 10 சதவீதம் பேரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியான ஆன்டிபாடி மறைந்து விடுவதும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும்” அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

இதனால், கொரோனாத் தொற்றிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்றும், ஆய்வை மேற்கொண்ட மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.