``EIA குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!" - உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

``EIA குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!


இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1886-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

அப்படி அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். இதனை மாற்றியமைத்து சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020-ஐ மத்திய அரசு உருவாக்கி உள்ளதாகவும் அது பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டு தொழில் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்து கேட்பை இந்த புதிய வரைவு தடை செய்கிறது என்றும் இதன் மூலம் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்லர்கள் பலரும் குற்றம் சாட்டினர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020ல் கூறப்பட்டிருக்கும் திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைப்பவை எனக்கூறி சூழலியல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் மற்றும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதுமட்டுமன்றி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை 3 மொழிகளில் மட்டுமே மோடி அரசு வெளியிட்டிருப்பதும் சமீபத்தில் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகியுள்ளது
 
சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை அனைத்து மாநில மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக வெளியிடப்படவேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ஆங்கிலம், இந்தி தவிர குறைந்தது 10 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் 30 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், கருத்துக் கேட்பு தேதியையும் ஆகஸ்ட் 11 வரை நீட்டித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை முழுமையாக மத்திய அரசு இன்னும் செயல்படுத்தாமல், மராத்தி, ஒடியா, நேபாளி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே வெளியிட்டிருந்தது. 
 
இதனிடையே, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

 

தமிழகத்தில் மீனவ அமைப்பு சார்பாக, கே.ஆர் செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கம் அமைப்பின் தலைவர் தியாகராஜன் சார்பில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்கின் மனுவில், "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, 11.04.2020 இல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது, அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கக் கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளனர்.

இந்த வழக்கு, இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன்படி இன்று (ஆக.6) நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டி வரைவு அறிக்கை நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு (ஆக.7) ஒத்திவைத்தனர். மேலும், மத்திய அரசு பிற மொழிகளில் இதை வெளியாடாதது ஏன் என்பது குறித்து பதிலளிக்கவும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment