திரையரங்குகள் திறப்பது எப்போது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாடு முழுவதும் 5 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு தளர்வுகளை மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இதனால், இந்தியா மெல்ல மெல்லத் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறது. பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போது இயங்கத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, திரைப்படத்துறையை மீட்டெடுப்பது மற்றும் திரையரங்குகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்த ஆலோசனையின்போது பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “இந்தியாவில் உள்ள 9,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வந்ததாக” குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று காரணமாக, மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா அச்சம் காரணமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் பூட்டப்பட்டு விட்டதாகவும்” அவர் தெரிவித்தார்.

“கொரோனா காரணமாக தற்போது வரை நாடு முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, திரைப்பட படப்பிடிப்புகளும் நாட்டின் பல பகுதிகளில் முடங்கிக் கிடப்பதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், “கொரோனா காலத்தில் திரைப்படத் தயாரிப்புகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக, அரசு ஆலோசித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும்” என்றும், பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மேலும், “ஊதிய மானியம், 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன், வரிவிலக்கு, குறைந்தபட்ச மின்சார கட்டணம் உள்ளிட்ட திரைப்படத்துறை பிரதிநிதிகளின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, நல்ல முடிவு எடுப்பதாகவும்” அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

குறிப்பாக, “5 வது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த நடப்பு மாதத்தில், கொரோனா தாக்கத்தை ஆய்வு செய்த பிறகே திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும்” என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இதனிடையே, தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர் பங்கேற்க அனுமதி தந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு, சின்னத்திரை சங்க நிர்வாகிகள் நேரில் நன்றி தெரிவித்தனர்.