தாமதமாகப் பந்து வீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில், இந்திய அணி, சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணி வீசிய கடைசி ஓவரில் மட்டும், மொத்தம் 4 விக்கெட் வீழ்ந்தன. அந்த போட்டி சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கி, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த போட்டியில், 4 ஓவர்கள் வீசி 33 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷர்துல் தாக்குர், ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில், இந்த போட்டியின்போது இந்திய அணி நிதானமாகப் பந்துவீசியதாக, ஐசிசி குற்றம் சாட்டியது. குறிப்பாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் 2 ஓவர்கள் குறைவாக வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால், இந்திய அணிக்கு, ஆட்ட ஊதியத்திலிருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 வது மற்றும் கடைசி டி20 போட்டி, நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.