2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.

 Budget 2020 submitted by Nirmala Sitharaman

இதனையடுத்து, இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, மரியாதை நிமித்தமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். 

பின்னர், நாடாளுமன்றம் வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காலை 11 மணிக்கு, 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.  

அப்போது உரையாற்றிய அவர், “ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின், ஒவ்வொரு குடும்பமும் தங்களது மாத செலவில் சராசரியாக 4 சதவீதத்தை மிச்சப்படுத்தி உள்ளதாக” தெரிவித்தார்.

அத்துடன், “2006-2016 க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் சுமார் 27.1 கோடி பேர் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர்” என்றும் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.  

 Budget 2020 submitted by Nirmala Sitharaman

வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை நிதி அமைச்சர்கள்  சூட்கேசில் வைத்துக் கொண்டு வருவது வழக்கம். ஆனால், கடந்த முறையே சூட்கேசுக்கு பதிலாக அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில், நிர்மலா சீதாராமன் ஆவணங்களைக் கொண்டு வந்தார். அதேபோல், இந்த முறையும் அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவணங்களைக் கொண்டு வந்து, தாக்கல் செய்தார்.