டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு புகாரில் சிக்கிய 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வானது, கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. பின்னர், இது தொடர்பான தரவரிசை பட்டியல், கடந்த நவம்பர் மாதம் வெளியினது.

இதில், முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்தவர்களில், 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரியவந்தது.

அத்துடன், இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களைப் பிடித்தவர்களை நேரில் அழைத்து விசாரித்தனர்.

கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற இந்த விசாரணையில், பலரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அதன்படி முதற்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் இருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு புகாரில் சிக்கிய 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களைத் தகுதிநீக்கம் செய்து டி.என்.பி.எஸ்.சி. அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், அவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.