வீதியில் சுற்றிய இளைஞர்களுக்கு போலீசார் மரண பீதியைக் காட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.

பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதமாக மத்திய - மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், அரசின் உத்தரவையும் மீறி நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், வீட்டை விட்டு தேவையின்றி வெளியே சுற்றுவதாகப் புகார்களும் எழுந்தன.

இதனால், தேவையின்றி வெளியே வருபர்வகளின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதும், அவர்கள் மீது வழங்கு பதிவு செய்வதும், அபராதம் விதிப்பதுமாக போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரிபவர்களைத் தடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீசார் நூதன முறையைக் கையாண்டனர். அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் டி.எஸ்.பி. முருகவேல் ஆலோசனையின் பேரில், காவல்துறை ஆய்வாளர் சுஜாதா, சக போக்குவரத்து போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை, பல்லடம் நான்கு வழி சாலையில் தயாராக நிறுத்தி வைத்திருந்தனர்.

அந்த ஆம்புலன்சில், கொரோனா வைரஸ் தாக்கிய நபர் போல ஒருவர் ஆடை அணிந்து உள்ளே உள்ள படுக்கையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தார்.

அப்போது, பல்லடம் நான்கு வழி சாலையில், தேவையின்றி சுற்றித் திரிந்த இருசக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி, விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தேவையின்றி சுற்றித் திரிபவர்களை, அருகில் நிற்க வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்சில் ஏற்றி, உள்ளே ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் போல் ஆடை அணிந்த நபர், உள்ளே புதிதாக வந்த நபர்களைத் தொட முயச்சிக்கிறார்.

அப்போது, உள்ளே புதிதாக வந்த இளைஞர்கள் உயிர் பயத்தில் கத்தி கூச்சலிடுகிறார்கள். அந்த வாகனத்தில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே குதித்துத் தப்பிக்க முயல்கிறார்கள். இந்த காட்சிகள் அனைத்தும், பார்ப்பதற்கு சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், உள்ளே புதிதாக அனுப்பப்படும் நபர்கள், கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதில் தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வீட்டிற்குத் திருப்ப முடியும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால், அந்த வழியாகத் தேவையின்றி வரும் இளைஞர்கள், தலைதெறிக்க 4 புறமும் விழுந்து அடித்து ஓடும் காட்சிகள் எல்லாம், பார்ப்பதற்கு நகைச்சுவையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.