டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“ரௌடி பேபி சூர்யா” என்றால், டிக்டாக் பிரியர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு அவர் டிக்டாக் பிரபலமாக அறியப்பட்டு வருகிறார்.

திருப்பூர் அய்யம்பாளையம் அடுத்த சபரிநகரைச் சேர்ந்த “சுப்புலட்சுமி” தான், டிக்டாக்கில் தன் பெயரை “சூர்யா” என்ற பெயரில் தொடர்ந்து அலப்பறைகள் செய்து சேட்டையான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே, ரௌடி பேபி சூர்யா சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி ஊர் திரும்பினார். திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவரை, கண்ட அக்கம் பக்கத்தினர் கொரோனா பீதியால் போலீசாருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், “எனக்கு கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு தனக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு தான் என்னை அதிகாரிகள் அனுப்பி வைத்தார்கள்” என்றும் கூறி, அவர் போலீசாருடனும், சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், 108 ஆம்புலன்சில் ஏற மாட்டேன் என்றும், இருசக்கர வாகனத்திலேயே வருவதாகவும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனைத்தொடர்ந்து, “நான் ஏசி அறையிலேயே இருந்துவிட்டேன். தமிழகத்தில் அடிக்கும் வெயிலில் இவர்களிடமிருந்து தனக்கு கொரோனா பரவி விடுமோ என்று பயமாக இருக்கிறது. இதனால். அரசு மருத்துவமனையில் தனி அறை எனக்கு ஒதுக்கித் தர வேண்டும், 3 வேளைக்கும் தரமான உணவு வேண்டும்” என்றும், அதிகாரிகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

பின்னர், அவருக்குத் திருப்பூர் ரயில் நிலையம் அழைத்துச் சென்ற சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ரௌடி பேபி சூர்யா வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்டவர் உள்ள வீடு என அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

இது தொடர்பாக, தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனால், கோபமடைந்த ரௌடி பேபி சூர்யா, செய்தி சேகரித்த குறிப்பிட்ட செய்தியாளர் குறித்து அவதூறு பரப்பும் விதமாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றையும், ரௌடி பேபி சூர்யா வெளியிட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த செய்தியாளர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார், ரௌடி பேபி சூர்யா மீது, “ஆபாசமாகப் பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு” செய்துள்ளனர்.

இதனால், ரௌடி பேபி சூர்யா இன்னும் அதிர்ச்சியடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். இதனிடையே, ரௌடி பேபி சூர்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.