தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, மே 22 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வன்முறையால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “பேரணியில் சமூக விரோதிகளால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். இது பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அளித்த பேட்டி குறித்து விசாரணை நடத்துவதற்காக, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியது.

அதன்படி, தூத்துக்குடி அலுவலகத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து, தனக்கு விலக்கு வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “நான் நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால், எனக்கான கேள்விக்கு நான் எழுத்து மூலம் பதில் அளிக்கத் தயார்” என்றும் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட விசாரணை ஆணையம், ரஜினியின் கோரிக்கையை ஏற்று, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

அத்துடன், ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜர் ஆவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ரஜினியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து ரஜினியின் வழக்கறிஞரிடம் தரப்பட்டுள்ளது. இதனால், நடிகர் ரஜினி குறிப்பிட்ட அந்த கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாகப் பதில் அளிக்க உள்ளார்.