தமிழகத்தில் உணவு பஞ்சம் என்கிற பிரச்சினையே எழவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழசினாமி, “கொரோனா தடுப்பு நடவடிக்கையில், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா தொற்றை தடுக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, “தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளைக் கடைப்பிடித்தால், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்றும், பொதுமக்கள் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும், முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

“கொரோனா தடுப்பு பணியில் காவல் துறை, உள்ளாட்சித் துறை ஆகியவை துணைபுரிவதாகவும், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் தங்கு தடையின்றி, எந்தவித சிரமும் இன்றி கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது” என்றும், சுட்டிக்காட்டினார்.

மேலும், “விவசாயிகளிடையே அதிகாரிகள் சென்று, விளைபொருட்களை விலைக்கு வாங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், அரசாங்கமே வீதி வீதியாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று விற்பனை செய்து வருவதாகவும்” அவர் கூறினார்.

இதனால், “தமிழகத்தில் உணவு பஞ்சம் என்கிற பிரச்சினையே எழவில்லை என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர் பழனிசாமி, குடிமராமத்து திட்டப் பணிகள் உடனடியாக தொடங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்” கூறினார்.

அத்துடன், “கொரோனா வைரஸ் பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஒலிபெருக்கிகள், ஊடகங்கள், குறும்படங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருவதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.