காதலைக் கைவிட மறுத்த மகளை ஆற்றில் தள்ளிவிட்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஊத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜா - கவிதா தம்பதியினருக்கு விவிதா என்ற மகள் உள்ளார். அவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், விவிதா அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்துள்ளார். இது தொடர்பாகத் தனது பெற்றோரிடம் அவர் தெரிவிக்கவே, அவரது பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விவிதாவுக்கும், அவரது பெற்றோருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தான் கல்லூரிக்குச் செல்ல நேரம் ஆகிவிட்டதாகக் கூறி, அவர் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, கடும் கோபத்துடன் கல்லூரிக்குச் சென்ற அவரது பெற்றோர்கள், அங்கிருந்து மகளை வெளியே அழைத்து வந்து, சமாதானம் பேசி, காதலைக் கைவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர் காதலைக் கைவிட முடியாது என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், விவிதாவுடன் பேசிக்கொண்டே செல்வது போல், அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை ஓரமாகச் சென்றுள்ளனர். அப்போது, விவிதாவை கொலை செய்யும் நோக்கத்தில், அருகில் உள்ள ஆற்றில் திடீரென்று விவிதாவை தள்ளி உள்ளனர்.

அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார், இதனைக் கவனித்து, விவிதாவை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், கொலை செய்யும் எண்ணத்தில் மகளை ஆற்றில் தள்ளிய பெற்றோரைக் கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோரே மகளை ஆற்றில் தள்ளிக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.