அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், அதிகமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை இப்போதே, அந்த கட்சிக்குள் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில். தமிழகத்தின் தற்போதைய அரசியல் களம் பரபரப்படைந்து உள்ளது.

முக்கியமாக, தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் “அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக யார்?” என்ற பிரச்சனைக்கான கேள்வியை, அக்கட்சியின் முக்கிய மற்றும் மூத்த அமைச்சர்களே தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான விவாதங்களும் கடந்த சில மாதங்களாகவே அக்கட்சிக்குள் சூடுபிடித்தது.

அதன் தொடர்ச்சியாகவே, அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து

அக்கட்சியின் சாமானிய தொண்டர் வரை கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சலசலப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று, கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.

அதன்படி, முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க அதிமுக தயாராகி வந்தது. இது தொடர்பாக நேற்று அதிகாலை முதல் சுமார் 18 மணி நேரம் அக்கட்சியின் மூத்த அமைச்சர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், ஒபிஎஸ் - ஈபிஎஸ் உடன் மாறி மாறி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். முக்கியமாக இந்த ஆலோசனையானது இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால், அதிமுகவில் உச்ச கட்ட எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

அப்போது, பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சார்பில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார்” என்று, அறிவித்தார். அதேபோல், அதிமுக வில் வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் குழுவில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி,

திண்டுக்கல் சீனிவாசன்
தங்கமணி
எஸ்.பி வேலுமணி
ஜெயக்குமார்
சிவிசண்முகம்
காமராஜ்
ஜேசிடி பிரபாகர் - முன்னாள் எம்.எல்.ஏ
மனோஜ் பாண்டியன்
பா மோகன் - முன்னாள் அமைச்சர்
ரா. கோபால கிருஷ்ணன் முன்னாள் எம்.பி
கி மாணிக்கம் - சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ

என்று, 11 முக்கிய நிர்வாகிகள் இந்த வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதனால், அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.