சிவகங்கையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததால், அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார், “தமிழ் உயிர் எழுத்துக்கள் எத்தனை?” என்று கேட்டதும், அதற்கு மாணவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்திலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாகப் பள்ளி மாணவர்கள் 2 பேர், அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது, அந்த 2 சிறுவர்களையும் மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். ஆனால், அந்த 2 சிறுவர்களிடமும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து, 2 சிறுவர்கள் மீதும் வழக்கோ, அபராதமோ விதிக்காத போலீசார், அவர்களை வினோதமான முறையில் கையாண்டனர்.

அதாவது, தமிழ் சார்ந்து அவர்களிடம் போலீசார் கேள்விகளைக் கேட்டு அதை வீடியோவாக எடுத்தனர்.

அந்த கேள்வி என்ன வென்றால், “தமிழில் உயிர் எழுத்துக்கள் எத்தனை?” என்ற கேள்வியை எழுப்பினர். அதற்குச் சிறுவர்கள் இரண்டு பேரும் திருதிருவென முழித்துள்ளனர். “பதில் சொல்லுங்கப்பா” என்று போலீசார்,

அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அப்போதும், அவர்கள் இருவரம் அமைதியாக இருந்துள்ளனர்.

உடனே, “சரி, அப்படினா ஆய்த எழுத்து எத்தனை? என்று மட்டும் பதில் சொல்லுங்கள் உங்களை விட்டு விடுகிறேன்” என்று, போலீசார் கேட்டுள்ளனர்.

அதற்குப் பதில் அளித்த ஒரு சிறுவன், அக்கத்தில் இருந்தவனைப் பார்த்து, “அவன் பதில் சொல்வான்” என்று, அருகில் இருந்தவனை மாட்டி விட்டான். ஆனால், அவனோ, சரியான பதில் சொல்வது போல் பாவனைச் செய்துகொண்டு.. பதில் சொல்ல வருவது போல் வார்த்தைகளை இழுத்துக்கொண்டே நின்றிருந்தான்.

“பதில் தெரியுமா? தெரியாதா? என்று போலீசார் கேட்க.. “200த்தி...” என்று மீண்டும் இழுத்துக்கொண்டே, நிற்க.. “200த்தி.. அப்பறம் என்ன?” என்று போலீசார் கேட்டுள்ளனர்.

மீண்டும் “நீ எத்தனாவது படிக்கிற?” என்று போலீசார் கேட்க, அதற்கு “+2 என்று”இருவரும் கூறி உள்ளனர். “சரி பதில் சொல்லுங்கள், உங்களை விட்டு விடுகிறேன் என்று, ஆய்த எழுத்து எத்தனை?” என்று போலீசார் மீண்டும் கேட்டுள்ளனர்.

அதற்கு, அந்த சிறுவன் அளித்த பதில் தான், அனைவரையும் கடும் அதிர்ச்சியடை செய்தது. அதாவது, இதற்குப் பதில் அளித்த அந்த சிறுவன், “ஆய்த எழுத்து மொத்தம், 268” என்று இழுத்து இழுத்து சொன்னான். அந்த சிறுவன் கூறிய பதிலால் அங்கிருந்த போலீசார் அதிர்ந்து போய் நின்றனர்.

மேலும், “நீ எந்த ஸ்கூல் படிக்கிற? என்று போலீசார் கேட், அந்த சிறுவனும் பதில் கூறுகிறான். அதன் தொடர்ச்சியாக, “சரி, நீ அ ஆ மட்டும் சொல்லிட்டு கிளம்பு, உன்னை விட்டு விடுகிறோம்” என்ற போலீசார் மீண்டும் கூறி உள்ளனர். அதன்படி, இவர்கள் இருவரும் “அ ஆ இ ஈ” என்று முழுவதும் கூறி உள்ளனர்.

சிறுவர்கள் இருவரும் கூறி முடித்ததும், அந்த இரண்டு சிறுவர்களுக்கும், “ஆயுத எழுத்து குறித்தும், உயிர் எழுத்துக்கள் குறித்தும்” விளக்கமாக போலீசார் எடுத்துரைத்துள்ளனர்.

அத்துடன், “சிறுவர்கள் இனிமேல் பைக் ஓட்டக் கூடாது” என்று, அறிவுரையும் கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர். போலீசாரின் தமிழ் ஆர்வம்
மற்றும், மாணவர்களைக் கையாண்ட விதம் தொடர்பான இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.