தமிழகத்தில் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் மிகப் பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இதனிடையே, சிவகாசியில் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலை தொழிலாளர்கள், உணவுக்கே கடும் சிரமப்படுவதாக, கடந்த சில நாட்களாகத் தமிழக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டன.

இதனைப் பரிசீலனை செய்து தமிழக அரசு, தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுப்பதற்காக, சமூக தனிமைப்படுத்தலை உறுதி செய்ய மாநில பேரிடம் மேலாண்மைச் சட்டம், 2005 ன் கீழ், 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

“அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் (ESI) கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“இதற்காக, சுமார் 2,177 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.