இன்பம், மனித வாழ்க்கையின் முதன்மையான குறிக்கோளாய் இன்று கொடிக்கட்டி பறக்கிறது.

இன்பம், உணர்ச்சியின் முழு உருவம். அடங்காமல் அலையும் ஐம்புலன்களின் பேரின்பமாக உச்சி முகர்ந்து பார்ப்பது, காமத்தில் உச்சம் முகர்ந்து பார்க்க அலையும், ஐம்புலன்களின் அடங்காமையை தான். மற்ற உணர்ச்சிகள் அனைத்தும் இவற்றுக்கு அடுத்து வரிசை கட்டி நிற்கும் சிற்றின்பங்களே.

இன்பத்தில் கூட மனிதன் இரண்டு நிலைகளை அனுபவிக்கும் பிரம்மனாகத் திகழ்கிறான். சிற்றின்பம், பேரின்பம்.

சிற்றின்பம், பேரின்பம் என, 'இன்பத்தின் இன்பத்தை' இரண்டு வகையாக வரையறுத்தவன் 90s கிட்ஸ், 80s கிட்ஸ் கிடையாது. தமிழ் இலக்கியங்கள் பிரித்துப் பார்த்து எழுத்தாணியில் பதிப்பித்த, உலகின் முதுபெரும் மூத்தவன் கிழவன் அவன் தமிழன்.

அறம் - புறம் என்று இருந்த வாழ்வியல் தந்துவங்களை பின் வந்த முதுபெரும் மூத்தவன் தமிழ் பாட்டன் எல்லாம்; அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் கோட்பாடுகளைத் தனித் தனியாக தெளிவாக வரையறுத்தார்கள்.

அறம் - புறம் என்று இருக்கையிலேயே, பேரின்பமாய் திகழும் காமத்தை, அறத்தில் வைத்துப் புதைத்தான் தமிழ் கிழவன். அதனால் தான், காதலை அறம் சார்ந்தது என்று வர்ணித்தார்கள் இலக்கிய தாத்தாக்கள்.

ஆனால், பின்னல் வந்த சாதி - மத வெறியர்கள்.. காமத்தை இனத்தின் விருத்தியாகப் பார்த்ததால், அறத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்ட காதலையும், காமத்தையும் எதிர்த்து கொடி நட்டார்கள்.

இதில், சில கொடிகள் இன்று வரை உயரப் பறந்துகொண்டிருக்கிறது. அறத்தின் எதிர்ப்பு கொடி உயரப் பறக்க, நாம் கூட சமயத்தில் கொடி காத்த குமரனாய், இயல்பாய் இருந்து சென்றிருப்போம். சாதிய வார்த்தைகள், நம் இயலாமையில் இயல்பாய் வெளிப்பட்டிருக்கலாம்.

போகட்டும், இன்பம் என்னும் காமத்தை அனுபவிக்கப் பல வழிகள் இருக்கின்றன. சாஸ்திர முறைகளின்படி, திருமணப் பந்தத்திற்கு ஏற்ப ஒரு பெண்ணை மனைவியாகக் கொண்டு, அவளுடன் இல்லறம் நடத்தி, அடங்காமல் அலையும் ஐம்புலன்களையும்.. காமசுகம் என்னும் பேரின்பத்தை அனுபவிப்பதுதான் இன்றைய வாழ்வியல் நடைமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளது.

அடங்காமல் அலையும் ஐம்புலன்கள் எனப்படுவது யாதெனில்; கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை நுகர்தலே இன்ப மயமான காமத்தை அடையும் வழிமுறைகளாகும்.

ஆனால், திருமணப் பந்தத்தைத் தூக்கி எரிந்து, சாஸ்திர முறைகளை ஏறி மிதித்து; நாகரிகம் வளராத பழங்கால முறையில் காணப்பட்ட.. 'பெண்களை அடிமையாகக் கருதித் தூக்கிக்கொண்டு செல்லும் ராட்சஸ மனம், பெண்களை ஏமாற்றி மணக்கும் இலாப மனம், எவ்விதச் சடங்கும் இல்லாத கந்தர்வ மனம், முறையற்ற உறவு, யாருக்கும் தெரியாத ரகசியத் திருமணம், கள்ளம் கபட நாடகமாய் அரங்கேற்றி, மனம் போன போக்கில் பெண்களிடம் காமத்தின் இன்பத்தை அபகரித்துக்கொண்டும், பறித்துக்கொண்டும் திரிவது' ஒன்றும் பேரின்பமாகாது. அது, பேரின்பத்தைக் குலைக்கும் சிற்றின்பத்தின் பேரறிவற்ற பெரும் குற்றங்களாகவே கருதப்படும்.

காம இன்பத்தில், பகிர்தலோடு இன்புற்று வெளிச்சம் பாய்ச்சுபவனே காமத்தின் தலைவன். ஆனால், அந்த காம இன்பத்திற்காகப் பெண்களை அடிமையாக நினைத்து, அவர்களை அடித்துத் துன்புறுத்தித் தனி ஆளாகவோ, கூட்டாகவோ சேர்ந்து வன்புணர்வது இன்பமாகாது. அது துன்பத்தின் துயர் நிலை.

அடித்துப் பறிப்பதிலா இன்பம்? அது கொடுத்துப் பெறுவதில் அடங்கியிருக்கிறது. இன்பமுற பகிர்பவனே காமத்தின் தலைவன்.

பெண்களை நய வஞ்சகமாய் கெடுத்து அடைவதும், காமகளியாட்டம் புரிந்து மோகத்தின் முழு உருவமாய் திரிபவனின் இயல்பில் அவனது புத்தியே, தறிகெட்டுத் திரிவது கண்ணாடியாய் தெரியும்.

இன்பம் என்பது, ஆசையை அடக்கி இறைவனை அடைவதே என்று ஆன்மிகமும் பேசலாம்.

ஆனால், உடல் மண்ணாவதும் மனம் ஆவியாவதும் தெரியாதவனே, பெண்களை நாடி தேடி ஓடி அலைந்து அடையத் துடிப்பவன் எல்லாம் உடம்பின் சதையைத் தேடி அலையும் பிண்டங்களே. இதை உணராதவர்கள் மூடர் கூடத்தவர்.

இன்பத்தில் துன்பம் சுகம் என்றால், காமத்தில் இன்பம் அளப்பறியா கலையின் பேரின்பம். இன்பம், பெண்களை அபகரித்து அடைவதல்ல, தீர தீர காதலைக் கொட்டி, தெகட்ட தெகட்ட காம மழை பொழிந்து சொர்க்கம் செல்லும் இனிய வழிப் பயணம். அது இனிதாக அமையட்டும். இன்பம், இனி இயல்பாய் இருக்கட்டும்.

“ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக” ஏ.டி.ஜி.பி. ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு கவலைத் தெரிவித்தார். இனியாவது, இந்த இன்பத்தின் வழி அறிந்து, குடும்பத்தில் வன்முறையைத் தவிர்த்து வாழப் பழகலாமே?!”