தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 வது முறையாக ரூ.1,000 நிதியுதவி வழங்கும் அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் சுமார் 3 மாதம் காலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டிலேயே இருப்பதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை கடந்த ஏப்ரல் மாதமும், மே மாதமும் வழங்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முதலில் 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 வது முறையாக ரூ.1,000 நிதியுதவி வழங்கும் அரசாணையை, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, “ரேசன் அட்டை தாரர்களுக்கு விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வழங்கப்பட்டது போலவே, ஜூன் மாதத்திலும் இந்த பொருட்கள் வழங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 வது முறையாக ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்” என்றும் தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

“இதற்காக, 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்” தமிழக அரசு கூறியுள்ளது.

இதன் மூலம் மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள் என 14 வகையான வாரியத்தைச் சேர்ந்த 8.39 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள்” என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.