அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அக்னி நட்சத்திரம் தொடக்கியபோது, சற்று குறைந்து அளவாக காணப்பட்ட வெப்பத்தின் தாக்கம், ஆம்பன் புயல் உருவான பிறகு, கடந்த ஒரு வார காலமாக முன் எப்போதும் இல்லாத அளவில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது.

குறிப்பாக, கடந்த 10 நாட்களாக வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் வரலாறு காண அளவுக்கு அதிகரித்துக் காணப்பட்டு வந்தது.

அத்துடன், தமிழகத்தில் சுமார் 10 மாவட்டங்களுக்கு மேல், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் தொடர்ந்து பதிவாகி வந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

மேலும், ஜூன் மாதத்திற்குப் பிறகு, இயல்பான வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி, அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மதுரை கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல்புதூர், தெப்பக்குளம் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அந்த பகுதியில் சில இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது.

அதேபோல், நெல்லையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், நெல்லைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, புனல்வாசல், ஒட்டங்காடு பகுதிகளிலும், பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வகோட்டை, கோமாபுரம், வளவம்பட்டி, ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளில் பரவலாகக் கனமழை செய்தது.

கடந்த பல நாட்களாக வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென்று பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.