காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா, கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்தும், அப்போது தந்தை பெரியார் செய்த செயல்கள் குறித்தும் பேசினார்.

இந்த செய்தி, தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் வைரலானது. இதற்குத் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “துக்ளக் விழாவில் பெரியார் பற்றிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனால், பெரியார் பற்றிய வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளைப் பலரும் இணையத்தில் தேடி படிகத்தத் தொடங்கினர். அத்துடன், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியிலும், பெரியார் தொடர்பான புத்தகங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் விற்பனையானது.

இந்நிலையில், செங்கல்பட்டு சாலவாக்கம் அடுத்த காலாப்பட்டு பகுதியில் பெரியார் சிலையின் கண்ணாடி, மூக்கு, மற்றும் கையை, மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், பெரியார் சிலையைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். அத்துடன், இது தொடர்பாகப் போராட்டம் நடைபெறாமல் இருக்க, ஊரின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.