கல்லூரி மாணவி ஓடும் காரில் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம் குர்தா பகுதியில் இளம் பெண் ஒருவர், பேருந்துக்காக, அங்குள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

நீண்ட நேரம் காத்திருந்தும் அங்குப் பேருந்து வராமல் இருந்ததால், அந்த வழியாக வந்த காரில் ஒருவர் லிப்ட் கொடுத்துள்ளார். அப்போது, காரில் ஏற்கனவே 2 பேர் இருந்துள்ளனர்.

கார் சிறிது தூரம் சென்றதும், அந்த பெண்ணை காரில் இருந்தவர்கள் அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, ஓடும் காரிலிருந்தே, அந்த பெண்ணை சாலையில் தூக்கி வீசியுள்ளனர்.

இதில், சாலையில் விழுந்த அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட அங்கேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது, அந்த வழியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, காரின் உரிமையாளரைக் கைது செய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் ஓடும் பேருந்தில், இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது, அதேபோல் ஒரு சம்பவம் தற்போது ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது, அந்த மாநிலத்தையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.