“திருவள்ளுவருக்கும், எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாகப் பேசி உள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் வீட்டின் அருகே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “திருவள்ளுவர் ஒரு ஞானி, அவர் சித்தர். அவர் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் நாத்திகரகல்ல, ஆத்திகர். 

Rajinikanth Thiruvalluvar

ஞானி, சித்தர்களை ஒரு குறிப்பிட்ட மதம், சாதிக்குள் அடக்க முடியாது. பாஜக, தனிப்பட்ட முறையில் அவர்களுடைய டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் பற்றி போட்டார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, அதைப்பற்றியெல்லாம் பேசாமல், இதை இவ்வளவு பெரிய விஷயமாக்கியது சில்லியாக இருக்கிறது.

பாஜக சார்பில் எனக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குச் சிலர் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள். திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசுறாங்க. ஆனால் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன். எனக்கு விருது கொடுத்தவர்களுக்கு நன்றி.

Rajinikanth Thiruvalluvar

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் மந்தமாகத்தான் உள்ளது; அதை மீட்க  என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அயோத்தி வழக்கின் தீர்ப்பு ஏதுவாக இருந்தாலும் அனைவரும் அமைதிகாக்க வேண்டும்" என்று முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிரடியாகப் பேசி அசத்தினார்.