துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார், தமிழக அரசு உயர் அதிகாரிகளும் புறப்பட்டுச் சென்றனர்.

Deputy CM

அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில், ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து, சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு, அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். 

அதன்படி, நாளை அமெரிக்காவின் சிகாகோ நகரத்திற்குச் செல்லும் அவர், அங்கு நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் முதலில் கலந்துகொள்கிறார். அதனைத்தொடர்ந்து, 10 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் விழா ஒன்றில் “INTERNATIONAL RISING STAR OF THE YEAR - ASIA AWARD" விருது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்படுகிறது.

Deputy CM

பின்னர், 12 ஆம் தேதி சிகாகோவில் தொழில் நிறுவனங்கள் தொடர்பான வட்ட மேசை கருத்தரங்கும், 13 ஆம் தேதி வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொள்கிறார். 

அத்துடன், 14 ஆம் தேதி அன்று ஹுஸ்டன் நகரில், தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்கள் மத்தியில் பேசுகிறார். 15 ஆம் தேதி ஹுஸ்டன் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் அவர், அந்த பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கைக்கான நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். 

இதனையடுத்து, 16 ஆம் தேதி நியூயார்க்கில் அமெரிக்கா வாழ் தமிழர்களிடையே உரையாற்றும் அவர், 17 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.