வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடல்நிலை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அணு ஆயுத சோதனையால், உலகத்தையே இமை உயர்த்தி திரும்பி பார்க்கச் செய்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்.

உலக வல்லரசான அமெரிக்காவிற்கே சவால் விடும் வகையில், அணு ஆயுதங்களைத் தயாரிப்பதும், அவற்றைப் பரிசோதிப்பதுமாகத் தொடர்ந்து உலக நாடுகளின் கண்டத்திற்கு ஆளாகி, வரிசையாகச் சர்ச்சையிலும் சிக்கினார் அதிபர் கிம் ஜாங் அன்.

இதனிடையே, அமெரிக்கா - வடகொரிய வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் ஜாங் அன் ஆகிய இருவரும், 2 முறை சந்தித்து பேச்சு வார்த்தையும் நடத்தினர்.

இதனிடையே, உலகம் முழுவதும் சுழற்றி அடிக்கும் கொரோனா வைரஸ், வடகொரியாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டு வந்தது.

மேலும், உலகத்திலிருந்தே வடகொரியா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனாலேயே, வட கொரியாவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட இல்லை என்றும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

அதே நேரத்தில், ஆண்டு தோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெறும் தனது பிறந்த நாளை, மிக விமர்சையாக கொண்டாடும் வட கொரிய அதிபர் கிம் ஜாங், இந்த ஆண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாடவில்லை. இதற்கு, கொரோனா வைரஸ் தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. அத்துடன், வட கொரிய அதிபர் கிம் ஜாங், கடைசியாக வெளியே தோன்றியது ஏப்ரல் 11 ஆம் தேதி என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, அதிபர் கிம் ஜாங் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்தது. குறிப்பாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பிறகு, அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதனால், உலக நாடுகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தியில் உண்மை இல்லை என்றும், அவர் அதிக வேலைப் பளு காரணமாக ஓய்விலிருந்து வருவதாகவும் வட கொரியா அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.