காதலித்து ஏமாற்றப்பட்ட வடமாநில இளம்பெண்ணை மீட்டு, போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் அருகே கருப்பூரில், கடந்த 2 ஆம் தேதி இரவு, 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிந்தார். தனியாகச் சுற்றித் திறந்த அந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.

அப்போது, அந்த பெண்ணின் பெயர் ரீபா என்கிற ராணி என்பதும், அவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், ஆந்திர மாநிலம் குண்டூரில் வீட்டு வேலைக்காக வந்திருந்தபோது, அந்த இளம் பெண்ணும், இளைஞர் ஒருவரும் காதலித்துள்ளனர். இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, இருவரும் ஐதராபாத் சென்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதனால், ராணியை குண்டூர் ரயில் நிலையத்திற்கு அவரது காதலன் வரச்சொல்லி இருக்கிறார். அவ்வாறே, ராணியும் ரயில் நிலையம் வந்து காத்துக்கொண்டு இருந்துள்ளார்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் காதலன் வராததால், அந்த நேரத்தில் வந்த சேலம் ரயிலில் ஏறி, சேலம் வந்துள்ளார். அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கிருந்தே கால்கள் போன போக்கில் நடந்தே சென்றுள்ளார். அப்படி தான் இந்த ஊருக்கு வந்ததாக, கருப்பூர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காதலனின் செல்போன் நம்பரை வாங்கி, போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது, காதலனின் செல்போன் எண் சுச் ஆப் என்று வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, இளம் பெண் ராணியை, சேலம் கோரிமேடு பெண்கள் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர். அத்துடன், ராணியின் பெற்றோருக்கும், ஐதராபாத் போலீசாருக்கும், சேலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.