நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறக்கப்பட்டுள்ளது.

தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா.

இந்நிலையில், தனது 4 பெண் பிள்ளைகளை நித்தியானந்தா, அவரது ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் குஜராத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குஜாரத் போலீசார், அவரது ஆசிரமத்திற்குச் சென்றனர். ஆனால், நித்தியானந்தா அங்கு இல்லை. இதனையடுத்து, அவர் வெளிநாட்டில் இருப்பதாக அவரது சீடர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர் ஈகுவடார் நாட்டின் தீவு ஒன்றினை வாங்கி உள்ளதாகவும், அதனைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி ஐ.நா.சபையில் விண்ணப்பித்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால், இந்திய அரசு கடும் அதிர்ச்சியடைந்தது.

இதனைத்தொடர்ந்து, நித்தியானந்தா தங்களிடமிருந்து தீவு எதையும் வாங்கவில்லை என்று ஈகுவடார் அரசு மறுத்தது.

இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு 'புளூ கார்னர் நோட்டீஸ்' வழங்கக் குஜராத் போலீஸ் கடந்த மாதமே முடிவு செய்தனர்.

அதன்படி, இண்டர்போல் போலீசாரின் உதவியைக் குஜராத் போலீசார் நாடினர். அதன் அடிப்படையில், குஜராத் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, நித்தியானந்தாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய போலீசார் மட்டுமின்றி, நித்தியானந்தாவைக் கைது செய்யும் பொறுப்பு சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போல் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால், நித்தியானந்தாவுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.