பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் என்ன தான் நடக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில், 5 பேர் கொண்ட கும்பலால் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி மரண வேதனை அனுபவித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பல்வேறு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு இன்று காலை நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனைக்கு, டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, குற்றம் நடந்தபோது, தாம் மைனர் என்பதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தர். இந்த மனுவும் கடைசி நேரத்தில், தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, குடியரசுத் தலைவருக்குப் புதிதாகக் கருணை மனு ஒன்றை அனுப்பி இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த விபரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மறு உத்தரவு வரும் வரை, 4 பேருக்கும் இன்று அளிக்கப்பட இருந்த தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம்
தடை விதித்தது.

இதனால், நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை, 2 வது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டது.

முன்னதாக, நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் தாக்கூரின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் நேற்று கண்ணீர்மல்க செய்தியாளர்களை சந்தித்த நிர்பயாவின் தாயார் ஆஷா, “ தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று குற்றவாளியின் வழக்கறிஞரான ஏ.பி.சிங் தன்னிடம் வந்து சவால் விட்டதாகக் குற்றம்சாட்டினார்.
ஆனாலும், குற்றவாளிகளைத் தூக்கிலிடும் வரை தான் தொடர்ந்து போராடுவேன்” என்றும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.