நிர்பயா பலாத்கார குற்றவாளிகள் இந்து மதத்தைச் சாட்சிக்கு இழுத்து, தண்டனையிலிருந்து தப்ப முயன்றுள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில், 5 பேர் கொண்ட கும்பலால் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு, ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், தங்களது மரண தண்டனையைக் குறைக்கச் சொல்லி, குற்றவாளிகளில் ஒருவரான அக் ஷய் குமார் சிங், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்களது தண்டனையைக் குறைக்கச் சொல்லி “இந்து மத தத்துவங்களை” மேற்கொள் காட்டியிருக்கிறார். மேலும், டெல்லி மாசு பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்படி, “டெல்லி என்.சி.ஆர்., மெட்ரோ நகரங்களில் காற்றின் தரம் என்பது, எரிவாயு அறைக்குள் உட்கார்ந்து இருப்பதைப் போன்று உள்ளது.
டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள நீரும் விஷத்தால் நிறைந்துள்ளது. டெல்லியில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதனால், தூக்குத் தண்டனை எங்களுக்குத் தனியாகத் தேவையில்லை. இந்த காற்று மாசு காரணமாக, ஆயுள் குறுகியதாக உள்ளது. பிறகு ஏன் எங்களுக்கு மரண தண்டனை?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், அந்த மனுவில் இந்து மதம் குறித்துக் குறிப்பிட்டுள்ள அவர், “ 'சத்ய யுகம்' (இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்ட நான்கு யுகங்களில் முதலாவது யுகம்) காலகட்டத்தில், ​​மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று வேதங்கள், புராணங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஆனால், நாங்கள் இப்போது கலியுலகில் (இந்து புராணங்களில் 4 வது யுகம்) இருக்கிறோம். இங்குச் சராசரி ஆயுட்காலம் 50, 60 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. எனவே எங்களைத் தூக்கில் போட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, குற்றவாளிகளின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனிடையே,
தண்டனையிலிருந்து தப்புவதற்காக, குற்றவாளிகள் இந்து மதத்தைச் சாட்சிக்கு இழுத்துள்ளது தற்போது, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.