காதலனுடன் சண்டைபோட்டு கல்லூரி மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி ரோஜா நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா, நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பிரியங்காவும், அப்பகுதியைச் சேர்ந்த கோகுலும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பும் வழியில், தனது காதலன் கோகுலுடன் பிரியங்கா பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதில், மன உலச்சலுக்கு உள்ளான பிரியங்கா, அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் உள்ள கிணற்றில், திடீரென்று குதித்துள்ளார்.

இதனைக் கவனித்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனால், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி அந்த பெண்ணை மீட்டனர். அப்போது, பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் காதலன் கோகுலிடம் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, காதலனுடன் சண்டைபோட்டு கல்லூரி மாணவி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.