“நடிகை சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் ஆகிய இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம்” என்று, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

28 வயதாகும் சின்னத்திரை நடிகை சித்ரா, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற தொடரில் 'முல்லை' என்ற, கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

அதாவது, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா, நேற்று அதிகாலை நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த அவரது கணவன் ஹேமந்த் ரவியிடம் போலீசார் விசாரித்து வந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சித்திராவின் உறவினர்கள் பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். நடிகை சித்ரா, பதிவு திருமணம் செய்து 2 மாதங்களே ஆவதால், அவரது மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஹேம்நாத் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது படப்பிடிப்பு தளத்தில் தகராறு ஏதேனும் நடந்ததா? என்று, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

முக்கியமாக, நடிகை சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா என்று விவாதிக்கப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையின் முதல் கட்ட தகவலின் படி,
சித்ரா தற்கொலை தான் செய்துகொண்டு உள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல்கள் அவருடைய சொந்த நகத்தில் இருந்து வந்தது என்றும், தெரிய வந்துள்ளது.

ஆனாலும், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நடிகை சித்ரா கணவரிடம் ஹேம்நாத்திடம் 3 வது நாளாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, “சித்ராவுக்கு ஏற்கனவே பதிவுத் திருமணம் நடந்ததாகவும், அவருடைய கணவரான ஹேம்நாத் துன்புறுத்தலின் காரணத்தாலேயே அவர் தற்கொலை
செய்திருப்பார்” எனவும், பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, சித்ராவின் சக நடிகர்கள், நண்பர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று ஹேம்நாத் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, “படப்பிடிப்புத் தளத்தில் சித்ரா கணவர் ஹேம்நாத், சித்ராவிடம் அடிக்கடி சண்டையிட்டது தெரியவந்துள்ளது. ஹேம்நாத் குடித்துவிட்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபடுவார்” எனவும் பலரும் தெரிவித்து உள்ளனர்.

அது மட்டும் இல்லாமல், சித்ராவின் தாயார் விஜயா, “ஹேம்நாத்தை விட்டு பிரிந்துவருமாறு” தொடர்ந்து கூறிவந்ததால், சித்ராவிற்கு மன உளைச்சல்
ஏற்பட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இதனால், சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குருஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய சைபர் ஆய்வகத்திற்கு
சித்ராவின் செல்போன் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதில் சித்ரா செல்போனில் கடைசியாகப் பேசிய பதிவுகள் மற்றும் அவர் அனுப்பிய குறுஞ்செய்தி ஆகியவற்றைத் தீவிரமாகச் சேகரிக்கும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஹேம்நாத் கூறுவதும் ஒத்துப்போனால் பாதிப்பு இருக்காது என்றும், இதில் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல்கள் வெளியானால் ஹேம் நாத் கைதாவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 3 நாள்களாகத் தொடர்ந்து ஹேம்நாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். ஆர்டிஓ விசாரணை முடிவடைந்து அவர்கள் அளிக்கும் இறுதி அறிக்கை முக்கியத் தகவல்கள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.