கடனுக்கு சிகரெட் தர மறுத்ததால், கடன் கேட்ட இளைஞர் கடையை தீ வைத்து கொளுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே கடைக்காரர் சிகரெட் கடன் தர மறுத்த ஆத்திரத்தில் கடையை தீ வைத்து கொளுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் நாகமலையைச் சேர்ந்த பூமிநாதன், அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தில் கடும் சிரமப்பட்ட பூமிநாதன், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், மீண்டும் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார்.

இதனிடையே, ஊரடங்கிற்கு முன்பு வரை பலருக்கு கடன் கொடுத்த பூமிநாதன், தற்போது யாருக்கும் கடன் கொடுக்காமல் பழைய கடன்களை கேட்டு வசூலிப்பதில் மும்மரம் காட்டி வந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன், இரவு 7 மணிக்கு கடைக்கு வந்து பூமிநாதனிடம் ஒரு சிகரெட் கடன் கேட்டுள்ளார். அவரும் ஒரு சிகரெட் தானே என கடனுக்கு தந்துள்ளார்.

ஆனால், சிறிது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்த குணசேகரன், மீண்டும் ஒரு சிகரெட் கடன் கேட்டுள்ளார். அப்போது, கடன் தர பூமிநாதன் மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, கடும் கோபமடைந்த குணசேகரன், “எனக்கு சிகரெட் தராமல் எப்படி கடை நடத்துகிறாய்” என கடுமையாக எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.

இதனிடையே, வழக்கம் போல இரவில் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டு, காலையில் வந்து பூமிநாதன் கடையை பார்த்துள்ளார். ஆனால், கடை அங்கு இல்லாமல், கடையின் கூரைகள் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் எல்லாம் சாம்பலாக கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த பூமிநாதன், அங்குள்ள நாகமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குணசேகரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடையை தீ வைத்து எரித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை கைது செய்து, போலீசார் அழைத்துச் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.