கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், கள்ளாவில் உள்ள பணத்தைத் திருடாமல், வெங்காயத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தைத் தொட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்ய்பட்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவின் சுடஹாட்டா பகுதியில் உள்ள மொத்த காய்கறி கடையின் பூட்டை உடைத்து நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சுமார் 50 ஆயிரம் மதிப்பாலான வெங்காயத்தை, மூட்டை மூட்டையாகத் திருடிச் சென்றுள்ளனர். அத்துடன், பூண்டு, இஞ்சி ஆகியவற்றையும் கிலோ கணக்கில் திருடிச் சென்றுள்ளனர்.

காலையில் வழக்கம்போல் கடையைத் திறக்க வந்த, அந்த கடையின் உரிமையாளர் அக் ஷய் தாஸ், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது, வெங்காயம் மூட்டை மூட்டையாக காணாமல் போனது தெரியவந்தது. அப்போது, கள்ளப்பெட்டியை பார்த்துள்ளார். ஆனால், அதிலிருந்த பணம் அப்படியே இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அங்குள்ள காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கடையின் பூட்டை உடைத்து, பணத்தைக் கொள்ளையடிக்காமல், வெங்காயத்தைக் கொள்ளையடித்துள்ள சம்பவம், இணையதளத்தில் வரும் மீம்ஸ்சை மிஞ்சிவிடும் அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.