டெல்லி மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் டெல்லி, பெங்களூருவில் ஐ.ஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் வரிசையாகக் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் கொலை வழக்கிலும், தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் காஜா மொய்தீன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இது போன்ற தொடர் கைது நடவடிக்கையால், கடும் அதிர்ச்சியடைந்த தீவிரவாதிகளின் அமைப்பான, “அல்ஹிந்த் பிரிகேட்” என்னும் தீவிரவாத அமைப்பு, தமிழகம் மற்றும் டெல்லி போலீசாருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக “டெலிகிராம்” என்ற சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள மிரட்டலில், “ஐ.எஸ். ஆதரவாளர்களைக் கைது செய்வதற்குப் பதிலடி தரப்படும்” என்று தெரிவித்துள்ளனர். அத்துடன், டெல்லி மற்றும் தமிழக போலீசாரை இழுவுப்படுத்தும் விதத்தில், அந்த கடிதம் தமிழில் எழுதப்பட்டிருந்தது.

மேலும், இந்த மிரட்டல் பதிவுடன், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளின் படங்களையும் தீவிரவாதிகள் இணைத்தும் அனுப்பி, போலீசாருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மேலும், எந்த “லாகின்“னிலிருந்து, இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது என்றும், எந்த பகுதியிலிருந்து மிரட்டல் வந்திருக்கிறது என்பது குறித்தும், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழகம் மற்றும் டெல்லியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடம் இடம் எல்லாம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.