நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய புதிதில், அது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்துகூடப் பார்க்கவில்லை. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், கொரோனா வைரஸ் மிகப் பெரிய தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவுக்க மருந்து கண்டு பிடிக்க முடியாமல் உலக நாடுகள் எல்லாம் ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கை நீடித்துள்ள நிலையில், இந்தியாவிலும் ஊடரங்கு நீடிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், அது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு இன்று காலை முதல் கூறிவந்தது.

இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,421 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 25 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் முழு வீரியத்துடன் பரவி வருகிறது.

இதனிடையே, ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து, கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு பல மாநில அரசுகள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தன. பல்வேறு அரசுத்துறைகளின் நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு காலம் இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், கொரோனாவுக்கு எதிராகப் பரவும் வதந்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செய்திகளைப் பகிரும் அளவைக் குறைக்க வாட்ஸ்ஆப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப் மூலம் இனி செய்திகளை பார்வர்டு செய்யும் போது, ஒருமுறை ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.