இந்தியா-அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இன்று காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் புடை சூழ, அதிபர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார்.

பின்னர், டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, ஐதராபாத் மாளிகையில், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியா - அமெரிக்கா இடையே மிக முக்கியமான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது இந்திய மதிப்பில் 21 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும், பிரதமர் மோடியும் - டொனால்டு டிரம்பும், கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய ட்ரம்ப், “இந்திய மக்கள் பிராதமர் மோடியை அதிகம் நேசிக்கிறார்கள்” என்று புகழாரம் சூட்டினார். “பிரதமர் மோடியும் நானும் நாட்டு மக்களைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதில் இரு நாடுகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக இருவரும் சேர்ந்து நீண்ட நேரம் ஆலோசித்ததாகவும், இரு நாடுகளும் இணைந்து விரைவில் சரித்திரம் படைக்கத் தயாராக இருப்பதாகவும்” கூறினார்.

இதனையடுத்து, பேசிய பிரதமர் மோடி,“பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தோம் என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவும் - அமெரிக்காவும், 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த நட்பு நாடுகள் என்றும் புகழாரம்” சூட்டினார். அத்துடன், “அதிபர் ட்ரம்ப் மீண்டும் இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளதாகவும்” பிரதமர் மோடி கூறினார்.